வியாழன், 1 செப்டம்பர், 2016

கொடுத்தல்

இருப்பதால் கொடுக்கிறான்
ஒருவன்
இயன்றதை கொடுக்கிறான்
ஒருவன்

கொடுத்தல் என்பது
நிகழத்தான் செய்கிறது
மனிதர்களாலும்
மனிதர்களை போன்றோராலும்

அடிபட்ட இடத்தில்
அலட்சியம் செய்தவன்
அன்பளிப்பு செய்கிறான்
ஆஸ்பத்திரிக்கு

தீராப்பசியில்
தின்றுகொண்டிருந்தவன்
அருகில் வந்த நாய்க்கும்
அமரவைத்து சோறு போட்டான்


கோயிலுக்கு ஒருவன்
கொடுத்தான்
குழந்தைகளுக்கு
ஒருவன் கொடுத்தான்

கறுப்புப் பணத்தில்
அள்ளிக்கொடுத்தவன்
உலகில் வெளித்தான்

கஷ்டப்பட்டு
கிள்ளிக் கொடுத்தவன்
உள்ளம் செழித்தான்

புண்ணியம் தேடி
ஒருவன் கொடுக்கையில்
புண்ணியவான்
ஒருவனும் கொடுப்பான்

கொடுத்தல் இங்கே
குன்றிவிடவில்லை
கர்ணணுக்கும்
கொடையுண்டு பாரினிலே!

கொடுத்தல் என்பதெல்லாம்
கொடையல்ல..

எதைக் கொடுத்தேன்
என்பதைவிட
எப்படிக் கொடுத்தேன்
என்பதே மேல்!

உழைப்பைச் சுரண்டியவனும்
கொடுத்ததால் வள்ளலானான்
பாருக்கே கொடுத்து
பாழாய்ப் போனார் ஏழை விவசாயி!

இலாபங்களை பொறுத்து
கொடுப்போரும் உண்டு
இலாபத்திற்காக
கொடுப்போரும் உண்டு!

பார்த்தவுடன் கொடுக்கும்
உண்மையும் உண்டு
கணக்குப் பார்த்து கொடுக்கும்
வியாபாரமுண்டு!

காருண்யம் என்ற பெயரில்
கறுப்புப் பணங்களும்
வெள்ளையடிக்கப்படுகிறது
பாவங்களும் விற்கப்படுகின்றன!

வாரிக் கொடுப்போரை
வள்ளல்களாக்கினோம்
மனதார கொடுத்தாரை
மறந்தே தொலைத்தோம்!

வெள்ளியை பார்க்கிறோம்
விளக்கில்தான் வாழ்கிறோம்
மனமுவந்து கொடுப்பவன்
விளக்காக வாழ்ந்திடுவான்!

துன்பமுணர்ந்து கொடு!
தன்மையறிந்து கொடு!
உள்ளம் மலர்ந்து கொடு!
பேதமின்றி கொடு!
பெருமையின்றி கொடு!
ஆனந்தப்பட கொடு!
அவசியமானதை கொடு!
உன்னால் முடிந்ததை கொடு!
உலகுக்கு அறிவிக்காமல் கொடு!

பின்

கொடுத்ததை மறந்துவிடு!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக